ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து பயணித்து உள்ளது. பேருந்தில் 18 பேர் பயணித்துள்ளனர். ஐதராபத்தில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களில் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் மம்தா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 15 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் மது அருந்தி இருப்பதை கண்டறிந்தனர். மது போதையில் தன்னிலை மறந்த ஓட்டுநர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பேருந்தை இயக்கியதாகவும், மழை வேறு பெய்து கொண்டு இருந்ததால் பேருந்தை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு கால் மற்றும் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித்ஷா பதவியேற்பு! தர்மேந்திர பிரதான் பதவியேற்பில் எதிர்க்கட்சிகள் கூச்சல்! - Lok Sabha Session 2024