உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அடுத்த கங்கனி பகுதியில் 27 யாத்ரீகர்கள் மற்றும் 29 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பேசிய போலீசார், பிரேக் செயலிழந்ததன் காரணமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவித்தனர். மேலும், பள்ளத்தில் இருந்த மரம் சுவர் போன்று விபத்துக்குள்ளான பேருந்தை தடுத்து நிறுத்தியதாகவும், அங்கு மரம் இல்லையெனில் பாகீரதி ஆற்றில் பேருந்து விழுந்து இருக்கக் கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பேருந்து விபத்துக்குள்ளான போது அதில் இருந்த பயணிகள் சிலர் தூக்கி வீசப்பட்டு பள்ளத்தில் சறுக்கிக் கொண்டு படுகாயம் அடைந்ததாகவும், மொத்தம் 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்! பாக். பயங்கரவாதி என்கவுன்டர் எனத் தகவல்! - Jammu Kashmir Encounter