லக்னோ: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதி எம்.பி. ரித்தேஷ் பாண்டே பகுஜன் சமாஜ்(Bahujan Samaj Party) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமாவை அறிவித்த சில மணி நேரங்களில் ரித்தேஷ் பாண்டே பாஜகவில் இணைந்து உள்ளார்.
நீண்ட நாட்களாக தன்னை கூட்டங்களுக்கு அழைக்காததாலும், கட்சி தலைமை தன்னிடம் பேசாததாலும், கட்சிக்கு தனது சேவை தேவையில்லை என்ற முடிவுக்கு தான் வந்ததாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. ரித்தேஷ் பாண்டே பகிர்ந்து உள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தொகுதியில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்ததாகவும், தொகுதி மேம்பாட்டுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கட்சியில் எனது சேவை மற்றும் இருப்பு தேவையில்லாத பட்சத்தில் எனது பணியில் முடித்துக் கொள்வதாக அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து டெல்லி விரைந்த அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல் அருணாசல பிரதேசத்திலும் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். 60 தொகுதிகளை கொண்ட அருணாசல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்ரிஸ் கட்சியில் இருந்து மூத்த எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான Ninong Ering உள்பட இருவரும், அதேபோல் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவின் கை சற்று ஓங்கியது போன்றே காட்சி அளிக்கிறது.
அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்கிறது. தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் உடல் கருகி இந்தியர் பலி! தொடரும் இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன காரணம்?