தௌசா: ராஜஸ்தான் மாநிலத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் இரண்டு நாட்கள் கழித்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா நகரைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகன் ஆர்யன். இச்சிறுவன் கடந்த திங்கள்கிழமை (டிச.5) அன்று கலிகாட் கிராமத்தில் உள்ள வயலில் விளையாடி கொண்டிருந்தபோது அங்குள்ள 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அப்போது சிறுவனின் தாயும் அங்கிருந்ததால் இதை கண்டு அலறிய அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் எந்திரங்களை கொண்டு சிறுவனை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிறுவன் விழுந்த ஒரு மணி நேரம் கழித்து மீட்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தேசிய மீட்பு படையினர் சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி இணையான குழியை தோண்டி சிறுவனை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: வரதட்சணை தடை சட்டம் தவறாக பயன்படுத்துவது அதிகரிப்பு... உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சுமார் 55 மணி நேரமான நீடித்து வந்த மீட்பு பணி முடிவுக்கு வந்து நேற்றிரவு சிறுவனை குழியில் இருந்து மீட்டனர். உடனே சிறுவனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசாதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனின் இறப்பு குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டுமொத்த மீட்பு குழுவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தௌசா மருத்துவமனை தலைமை மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், சிறுவனை மீட்டு கொண்டு வந்த பிறகு அவனை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் எடுத்தோம். ஆனால், அனைத்தும் வீணாகிவிட்டது என்றார்.
மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், மீட்பு பணியின்போது முதல் இயந்திரம் பழுதடைந்து விட்டது. பின்னர் இரண்டாவது இயந்திரத்தை செயல்பாட்டுக்காக கொண்டு வர வேண்டியிருந்தது. சிறுவனின் அசைவுகளை கேமராவை அனுப்பி கண்காணித்து வந்தோம். அந்த கிணற்றின் நீர்மட்டம் 160 அடியாக இருக்கும்'' என அவர் கூறினார்.