புதுடெல்லி: டெல்லி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு நிறுவனங்களின் விமானங்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்களுக்கு நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநகரங்களில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 10 விமானங்களுக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணத்துக்கு தயாராக இருந்த பயணிகள் விமானங்களில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்று இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெங்களூரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாக் நகருக்கு பயணிக்கவிருந்த இண்டிகோ பயணிகள் விமானம் (6E 77) தோஹாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதேபோன்று கோழிக்கோட்டில் இருந்து ஜெட்டாக் செல்லவிருந்த விமானம் (6E 65) ரியாத்துக்கும், டெல்லியில் இருந்து ஜெட்டாக் புறப்படவிருந்த விமானம் (6E 63) மதீனா நகருக்கும் திருப்பிவிடுப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், டெல்லியில் இருந்து சவூதி அரேபியாவின் தம்மம், இஸ்தான்புல் டூ மும்பை மற்றும் டெல்லி, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாக், மங்களூரு டூ மும்பை, லக்னெள டூ புனே ஆகிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படவிருந்த விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலையங்களில் நடப்பது என்ன?
தங்கஸின் பயணிகள் விமானங்கள் சிலவற்றுக்கும் சமூக வலைதளங்கள் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன. மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில், மிரட்டலையடுத்து விதிமுறைகளின்படி பயணகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்று ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வருகிறது கடும் சட்டம்: "வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்றாலும், இவற்றை எளிதாக எடுத்து கொள்ள முடியாது" என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை இனி விமானத்தில் பறக்க அனுமதிக்காதது என்பன போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை நீதிமன்ற உத்தரவின்றி உடனே கைது செய்யவும், இவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கவும் வசதியாக 1982 - விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.