ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக பிரபலங்களிடம் விற்பனை செய்வதற்காக கும்பல் போதைப் பொருளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் யாரிடம் போதைப் பொருள் விற்பனை செய்ய உள்ளனர் என்பது குறித்த பட்டியலை போலீசார் பெற்றனர்.
இதில் 13 பேர் கொண்ட பட்டியலில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதர் அமன் பிரீத் சிங்கின் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் அமன் பிரீத் சிங் உட்பட 6 பேரைப் பிடித்தனர். மேலும், அவர்களது சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமன் பிரீத் சிங் உட்பட 9 பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக கடந்த 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் ரகுல் பிரீத் சிங்கிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது அவரது சகோதரர் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
மேலும் போலீசார் நடத்திய ரெய்டில் ஏறத்தாழ 199 கிராம் கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அமன் பிரீத் சிங்கும் பல்வேறு படங்களில் நடித்து உள்ளார்.
தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வரும் அமன் பிரீத் சிங், இந்தியில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ராம்ராஜ்யா படத்தில் நடித்து இருந்தார். அமன் பிரீத் சிங், தனது சகோதரியுடன் சேர்ந்து சினிமாவில் ஆர்வம் கொண்டவர்களை வழிநடத்தும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்முவில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு - 4 வீரர்கள் வீரமரணம்! - Jammu Kashmir Conflict