பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா (MUDA), கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனை ஒத்துக்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக தலைவர் கடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலமைச்சர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவின் பல்வேறு இடங்களில் மைசூரு சலோ என்ற பெயரில் போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தனர்.
மைசூரு சலோ போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி காவலில் வைத்தனர். கார் மற்றும் பேருந்துகள் மூலம் மைசூரு நோக்கி படையெடுத்து சென்ற அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று தடுப்பு காவலில் அடைத்தனர்.
அதேபோல் போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்த பாஜக தலைவர்கள் தம்மேஷ் கவுடா உள்ளிட்டோரை அவர்களது வீட்டு வாசலிலே வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து பேசிய பிஒய் விஜயேந்திரா, மைசூரு சலோ போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் மாநிலம் முழுவதும் அனல் பறக்க உள்ளதாகவும் கூறினார்.
முடா முறைகேடு விவகாரத்தில் அரசு குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், மாநிலத்தின் வருவாய் அனைத்தும் ராகுல் காந்திக்கு செல்வதாகவும் கூறினார். ராகுல் காந்திக்கு கர்நாடக மாநிலம் ஏடிஎம் இயந்திரம் போன்று மாறிவிட்டதாக தெரிவித்தார். முடா முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போலீசார் தங்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும். தங்கள் தலைவர்களை கைது செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் தான் காவல் துறையை குறை கூறவில்லை என்றும் இது காங்கிரஸ் அரசின் சதி, வால்மீகி கூட்டு ஊழல் பட்டியலின மக்களின் பணத்தை மக்களவை தேர்தலுக்கு அரசு பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று சித்தராமையா கூறி வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அல்ல, காங்கிரஸில் பல பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: விவசாயியை துப்பாக்கியால் மிரட்டும் மனோரமா கேத்கர் வீடியோ: பூஜா கேத்கரை தொடரும் சர்ச்சை! - Pooja Khedkar Mother viral video