டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து அவரது தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுவாதி மலிவால் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், முதலமைச்சர் மாளிகையில் இருந்து, செல்போன் மூலம் டெல்லி காவல் துறைக்கு அவர் புகார் அளித்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் இல்லத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. அதேநேரம் சுவாதி மலிவால் தரப்பில் இருந்தும் முறையாக புகார் ஏதும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு பூதாகரமாக்கி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனது தனிப்பட்ட உதவியாளர் பிபாவ் குமார் மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார். இருப்பினும், அதில் சமாதானம் அடையாத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவாமி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் தனது உதவியாளர் பிபாவ் குமாரை பாதுகாப்பு அரண் போல் அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாத்து வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஷாத் பூனாவாலா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சுவாதி மலிவால் தாக்கப்பபட்ட விவகாரத்தில் 72 மணி நேரம் கடந்த நிலையில், இதுவரை வழக்குப்பதிவு கூட செய்யப்படவில்லை என்றும் அந்தளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாதுகாப்பு அரண் போல் தனது உதவியாளருக்கு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லக்னோ விமான நிலையத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அவரது உதவியாளர் பிபா ராவ் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள டெல்லி பாஜக துணை தலைவர் கபில், நேற்றிரவு லக்னோ விமான நிலையத்தின் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் கருப்பு சட்டை அணிந்தவர் ஸ்வாதி மாலிவாலை அடித்த பிபவ் குமார். சஞ்சய் சிங்குடன் சேர்ந்து பிபவ் குமார் செய்தது மிகவும் தவறு. சுவாதி மலிவாலை தாக்கிய விவகாரத்தில் அரவிந்த கெஜ்ரிவால் தனது உதவியாளரை அரண் போல் செயல்பட்டு பாதுகாக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு! எப்போது தெரியுமா? - Sunil Chhetri Announce Retirement