ஐதராபாத்: மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா மாநிலம் நர்சாபூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் இரண்டு பிரிவினருக்கு இடையே மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதாக கூறினார்.
அதில் ஒரு பிரிவினர் அரசியல் சாசனத்தை பாதுகாக்க விரும்புவதாகவும், மற்றொரு பிரிவினர் அரசியலமைப்பு சட்டம் தேவையில்லை என்றும் அதை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் மூலமாகவே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட கிடைப்பதாக தெரிவித்தார்.
அரசியலமைப்புடன் சேர்த்து இட ஒதுக்கீட்டு முறையையும் ஒழிக்க பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக ராகுல் காந்தி கூறினார். இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக பொதுத் துறை நிறுவனங்களை பாஜக விற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்து தனியார் மயத்தை அதிகரித்து, அதன் மூலம் இடஒதுக்கீடு முறையை ஒழிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பாஜகவின் சதித் திட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடி வருவதாகவும் ஏழை மக்கள் அரசியலமைப்பின் மூலமே தங்களுக்கான உரிமைகளை பெற்று வரும் நிலையில் அதை தடுக்க பாஜக திட்டமிட்டு செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பட்டியல், பழங்குடி மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்த 90 சதவீத மக்கள் நாட்டில் உள்ள நிலையயில் அவர்கள் சார்பில் குரல் எழுப்ப குறிப்பிட்டத்தக்க வகையில் தலைவர்கள் அரசியலில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை என்றார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை முதலில் கணக்கிட வேண்டும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், யார் எத்தனை சதவீதத்தில் உள்ளனர் என்பது தெரியவரும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்த வளமும் பிரதமர் மோடியிடம் உள்ள 2 சதவீத செல்வந்தர்களின் கைகளில் உள்ளதாகவும், உலகில் எந்த அரசும் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவித்தது கிடையாது என்றும் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மாநிலங்களில் உள்ள ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குடும்பத்தில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவரது வங்கிக் கணக்கில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி லட்சம் கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகவும் அதை அவரிடம் இருந்து பறித்து ஏழை மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், பட்டதாரிகள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும், வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியை 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதையும் படிங்க: "இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! - Lok Sabha Election 2024