பாட்னா: தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஆம் ஆண்டு பீகாரில் ஆட்சி அமைப்பதற்காக லாலு பிரசாத்தின் ஆர்ஜேடிக்கு ஆதரவாக பாஜகவை கைவிட்ட நிதிஷ்குமார் தற்போது மக்களவை தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ள சம்பவம் பாஜகவின் காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். பின்னர் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்துவதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறி, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் செயல்பட்டு வந்தார். இதனிடையே எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை அமைப்பதிலும் நிதிஷ் குமார் முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழலில் பீகாரில் கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடன் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருந்து வந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து இன்று (ஜன. 28) நிதிஷ்குமார் விலகி தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர் தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவுடன் இன்று மாலையே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதிஷ் குமாரின் இந்த மாறுதல் 2024 பொதுத் தேர்தலில் பீகாரில் பாஜக தனது இடங்களைப் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜகவை அரவணைக்கும் நிதிஷின் இந்த முடிவு காங்கிரஸுக்கு அதிர்ச்சியை அளித்தது.
ஜேடியூவில் பிளவை ஏற்படுத்தவும், தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக கொண்டு ஆட்சி அமைக்கவும் ஆர்ஜேடி திட்டமிட்டு வருவதே, நிதிஷின் இந்த திடீர் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் யாதவ் குடும்பத்திற்கு நெருக்கமான லாலன், தன்னை வெளியேற்றிவிட்டு, தேஜஸ்வியை முதலமைச்சராக்க உதவுவார் என்ற அச்சத்தில், லாலன்சிங்கை ஜேடி(யு) தேசியத் தலைவராக நிதீஷ் மாற்றினார். இந்நிலையில் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7வது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..! மாலையே மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்..!