மும்பை: மகாராஷ்டிராவில் பிரபல அரசியல்வாதி பாபா சித்திக் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரின் ஆதரவாளர்கள் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாபா சித்திக் கொலை தொடர்பாக இதுவரை குர்மெயில் சிங், தரம்ராஜ் காஸ்யாப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மும்பை எஸ்பிளனேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்றாவது நபரான ஷிவ் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாபா சித்திக்கை கொல்வதற்காக பல மாதங்களாக இந்த கும்பல் நோட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் கொலைக்காக தலா ரூ.50,000 வீதம் அவர்களுக்கு அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சமூக ஊடக தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருவதாக போலீசார் கவனத்துக்கு வந்துள்ளது. அந்த வீடியோவில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் மும்பை நிழல் உலக தாதாக்கள் அனுஜ் தபன் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோருடன் பாபா சித்திக் தொடர்பு வைத்திருந்ததால் அவரை கொன்றதாக லாரன்ஸ் பிஷ்னோய் ஆதரவாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மும்பை போலீசார், "வைரலான சமூக ஊடகப் பதிவைப் பார்த்தோம், அதன் நம்பகத்தன்மையை நாங்கள் சரிபார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.