ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கலால் வரித் துறையில் காலியாக உள்ள 583 காவலர் பணியிடங்களுக்கான தேர்வை அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இத்தேர்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர்.
முதல்கட்டமாக அவர்களுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வின் ஒரு பகுதியாக ஓட்டப் பந்தய தேர்வு நடைபெற்றது. தலைநகர் ராஞ்சிக்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி மற்றும் டெண்டர்கிராம், கிரிதிஹ்கில் உள்ள காவலர் மையம், சியாகி விமான நிலையம் ( பலாமு), ஜே.ஏ.பி.டி.எஸ். பத்மா ( ஹசாரிபாக்), சி.டி.சி. (ஷாம்செட்பூர்), முசாபானி, சாஹிப்கஞ்ச் ஆகிய ஏழு இடங்களில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஓட்டப் பந்தயம் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இத்தேர்வில் பங்கேற்றவர்களில் இதுவரை 12 இளைஞர்கள் திடீரென இறந்துள்ளது போட்டியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகபட்சமாக, பலாமு மாவட்டத்தில் நடைபெற்ற ஓட்டப் பந்தய தேர்வில் பங்கேற்றவர்களில் 70-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மயக்கம் அடைந்ததுடன், அவர்களில் 5 பேர் இறந்துள்ளதும் ஈடிவி பாரத்தின் கள ஆய்வில் தெரிய வந்தது. இதேபோன்று சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மைதானத்தில் மயங்கி விழுந்ததுடன், அவர்களில் இரண்டு பேர் இறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அரசுப் பணிக்கான தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்துள்ளதற்காக காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கடும் வெயில், கடுமையான உடற்பயிற்சி தேர்வுகள், தேர்வில் பங்கேற்ற மணிக்கணக்கில் கால்கடுத்த வரிசையில் காத்திருப்பது போன்றவற்றின் விளைவாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தமது இரங்கலை தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ஜார்க்கண்ட் மாநில டிஜிபி அனுராக் குப்தா, இதுகுறித்து தீவிர விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
"இச்சம்பவத்துக்கு பிறகு, போட்டி தேர்வில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓட்டப் பந்தய தேர்வு நடைபெறும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வசதியுடன்கூடிய மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டப் பந்தய தேர்வை காலை 6 மணிக்கு முன் ஆரம்பித்து 10 மணிக்கு முடிக்கவும் முயற்சித்து வருகிறோம். இறந்த இளைஞர்களின் உடற்கூராய்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அந்த அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை" என்றும் டிஜிபி அனுராக் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேலை கிடைக்காததால் விரக்தி; சகோதரியின் மூன்று வயது மகளை கொன்ற தாய்மாமன்