டெவ்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் திகார் சிறையில் இருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) ஜாமீனில் வெளியே வந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் கெஜ்ரிவால் வெளி வந்ததை ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், பல மாதங்கள் சிறை வாசத்துக்கு பிறகு வெளியே வந்த அவர், டெல்லியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர், "இன்னும் இரண்டு நாட்களில் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" எனக் கூறி, கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
"அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை சில மாதங்களுக்கு முன்பாக, வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்; இரண்டு முக்கியப் புள்ளிகளை நள்ளிரவில் தூக்கிய சிபிஐ!
அத்துடன், "தேர்தல் வரை, டெல்லி மாநில மக்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்ல உள்ளதாகவும், எனது நேர்மைக்கு நற்சான்று அளிக்கும் விதமாக அவர்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் ஆம் ஆத்மியை வெற்றிப் பெற வைத்தால், அப்போது தான் முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமருவேன் எனவும், அதுவரை அப்பதவியை தான் வகிக்க போவதில்லை" எனவும் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், " டெல்லி சட்டமன்றத்துக்கு பொது தேர்தல் நடைபெறும் வரை, ஆம் ஆத்மியை சேர்ந்த வேறு யாராவது முதல்வராக இருப்பார். அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் நடைபெறும் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றும் கெஜ்ரிவால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்தார்.
"பாஜக தேர்தலில் தோல்வியுறும் மாநிலங்களில், முதல்வர்களாக பதவி வகிப்போர் மீது வழக்குகளை தொடுக்கும் உத்தியை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது"என்றும் அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.