டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டு முதல் முறையாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது கோடைக் காலம் நெருங்கி வருவதால் டெல்லியின் குடிநீர் விநியோகம் குறித்து அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷிக்கு அனுப்பிய குறிப்பின் மூலம் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறுகையில்,"முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்துகொண்டு, நீர்வளத்துறை அமைச்சராகிய எனக்கு, தனது முதல் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். கைதுசெய்யப்பட்ட பிறகு, இப்படியான இக்கட்டான சூழலிலும் எப்படி இவ்வாறு டெல்லி மக்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
உண்மையில் இது என் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. கெஜ்ரிவால் தன்னை டெல்லி முதல்வராக மட்டும் நினைக்காமல், டெல்லியின் இரண்டு கோடி மக்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறார். ஒரு குடும்பத் தலைவர் எப்படி தன் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்கிறாரோ, அதுபோலவே கடந்த ஒன்பது ஆண்டுகளாக டெல்லியை அவர் நடத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.
பின்னணி என்ன?: டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபானக் கொள்கை தனியாருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்தது. இது சம்பந்தமாக அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் நேரில் ஆஜராகும் பட்சத்தில், கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அன்றைய தினமே அம்மாநில முதலமைச்சரும் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்தது அமலாக்கத்துறை.
இருப்பினும் 6 நாள்கள் மட்டுமே அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி மார்ச்.28ஆம் தேதிவரை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சிறையிலிருந்து கொண்டே தன்னுடைய முதல் உத்தரவு.
இதையும் படிங்க: "விரைவில் பொது சிவில் சட்டம் அமல்"- உத்தரகாண்ட் முதலமைச்சர் உறுதி! - Uniform Civil Code