டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தின் போது, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவரும் எம்பியுமான டி.ஆர்.பாலு உரையின் போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். அதனால் ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு எல்.முருகனை கடுமையாக சாடினார். டி.ஆர்.பாலுவின் சாடலுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டனர். பாஜக அமைச்சர்களின் கோரிக்கைக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வெள்ள நிவாரண நிதி குறித்த விவாதத்தின் போது குறிக்கீடு செய்ததால் என்னை திமுக எம்பி டிஆர் பாலு ஒருமையில் சாடினார்.
அவையில் தவறான தகவல்களை பகிர வேண்டாம் என தெரிவித்தேன். அதற்கு சற்றும் யோசிக்காமல் திமுக எம்பி டிஆர் பாலு, you are a unfit minister.. என்று சொல்லுவதற்கான அவசியம் என்ன? வேண்டுமென்றால் அவர் இதற்கு நீங்கள் எப்படி கேள்வி கேட்க முடியும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தான் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் இவ்வாறு ஒருமையில் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது.
அடிப்படையில் அவர் என்ன நினைத்து இதை கூறினார் என்று தெரியவில்லை. அடிமட்டத்தில் இருந்தவர் தன்னை கேள்வி கேட்பதா என்று நினைத்து இவ்வாறு சாடினாரா என்றும் தெரியவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக அருந்ததியர் சமூதாயத்தில் இருந்து வேறொரு மாநிலத்தில் அமைச்சராக்கப்பட்டு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அருந்ததி சமூதாயத்தினரின் பிரதிநிதியாகவும் தமிழ் சமூதாய மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவரை இவ்வாறு சாடுவது என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்று திமுக ஆட்சியில் நடந்துள்ளதா என்று பார்த்தால் கிடையாது.
இவ்வாறெல்லாம் பேசிவிட்டு எம்பி டிஆர் பாலு வெளியில் வந்து அவர் பேசியதை திசை திருப்பிக் கூறுகிறார். திமுக எப்போதும் திசை திருப்பும் வேலையில் தான் ஈடுபடுவார்கள். அரசாங்கத்தின் மேல் பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்தார். இதனிடையே, தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழ்நாடு பிரச்சனைகள் குறித்து பேசும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சரே அதை மறுக்கிறார் என்று டி ஆர் பாலுவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், "2014-ல் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக 16ல்டசம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை நானும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேரடியாகச் சென்று பாதிப்புகளை பார்வையிட்டோம். மறுநாளே 500 கோடி ரூபாய் நிதி நிவாரணம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சியையும் மத்திய அரசின் திட்டங்களையும் திமுக அரசு குறை சொல்லுவதையே தொழிலாக கொண்டுள்ளது.
சமூக நிதி குறித்து பேச திமுகவிற்கு அறுகதை இல்லை: சமூக நீதி குறித்து பேசும் திமுகவின் அமைச்சரவையில் 35 பேரில், தாழ்த்தப்பட்டவர்கள் 3 அமைச்சர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் பாஜகவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் துணைமுதலமைச்சர்கள் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் தாழ்த்தப்பட்டவர்களே. இது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவையும் குடியரசு தலைவராக நியமித்தது பாஜக தான். ஆனால் திமுக இதையெல்லாம் செய்யாமல் திமுக வெறும் பேச்சு தான். என்றாவது முதலமைச்சர் தாழ்த்தப்பட்ட விடுதிகளுக்கு சென்றிருக்கிறாரா? தலித் மக்களை தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றனர்.
போலி திராவிட மாடலும், போலி சமூக நீதியும் மக்களிடம் அம்பலமாகிவிடும். இப்படி மக்களை வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். தலித் அமைச்சரை இவ்வாறு சாடுவதற்கு திமுகவிற்கு துளியும் அறுகதை அல்ல. பாஜக மீது பொய்யான பிம்பத்தையே உருவாக்கிறார்கள். திராவிட கட்சிகளின் ஊழல்களை வெளிப்படுத்தி தமிழ்நாட்டில் வேகமாக வளரும் கட்சியாக இருந்து வருகிறது பாஜக. இதை பொறுக்க முடியாத திமுக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஒரே தலீத் பிரதிநிதியை இவ்வாறு இழிவுபடுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர்" என்று எல். முருகன் தெரிவித்தார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை தனது X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதாவது, "எம்பி டிஆர் பாலு அரசியலுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு அவமரியாதை. மேலும் இது போன்று தாழ்த்தப்பட்ட அமைச்சர் குறித்த கருத்தை அவர் முன்வைப்பது இது முதல் முறை அல்ல. டிஆர் பாலுவின் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியது. பல காலங்களாக திமுகவினால் முடியாததை பாரத பிரதமர் நரேந்திர மோடி அருந்ததியர் சமூதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்கி சமூக நீதியை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
திமுகவின் மற்ற அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை விட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பாக பணியாற்றி வருகிறார். எம்பி டிஆர் பாலு போன்ற மூர்க்க குணம் கொண்டவர்களே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு UNFIT. மத்திய இணையமைச்சரை அவதூறாக பேசியதற்கும், ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூதாயத்தினரின் பிரதிநிதியாக இருக்கும் அமைச்சரை கடுமையாக சாடியதற்கும் எம்பி டி.ஆர்.பாலு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?