அமராவதி (ஆந்திரா): நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், 4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திர மாநிலத்தில் 25, தெலங்கானாவில் 17 உள்பட 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் 454 வேட்பாளர்களும், சட்டசபை தேர்தலில் 2 ஆயிரத்து 387 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.கே மீனா தெரிவித்துள்ளார்.
4 கோடியே 14 ஆயிரத்து 181 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் வாக்களிப்பதற்காக 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக 3 ஆயிரத்து 500 கர்நாடக போலீசாரும், 4 ஆயிரத்து 500 தமிழக போலீசாரும் ஆயிரத்து 614 முன்னாள் ராணுவத்தினரும், 246 ஓய்வுபெற்ற போலீசாரும் என 1.06 இலட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களிலும், சந்திர பாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களிலும், ஜனசேனா 1 இடங்களிலும் வென்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 3 மக்களவைத் தொகுதியிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். ஷர்மிளா கடப்பா தொகுதியிலும், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி ராஜமகேந்திராவரம் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையிலும் நடைபெற உள்ளது. காலை 7.45 மணியளவில், கடப்பா தொகுதியின் ஜெயமஹால் அங்கனவாடி வாக்குச்சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார். அதன் பின், காலை 8 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் குண்டூரில் உள்ள வாக்குச்சாவடியின் தனது வாக்கினை செலுத்தினார். நடிகரும் ஜனசேனாவின் தலைவருமான பவன்கல்யான் 9:15 மணியளவில் மங்களகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மோதல்: இந்த நிலையில் பல்நாடு மாவட்டத்தில் மச்செர்லா மண்டலத்தில் காலை 6 மணிக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடப்பா மாவட்ட கவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் கவுஷல் தெரிவித்தார்.
ஆந்திர மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நேர நிலவரப்படி 23.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், சட்டசபை தேர்தலில் 23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Lok Sabha Election 4th Phase: 11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 32.78% வாக்குப்பதிவு - Lok Sabha Election 4th Phase