டெல்லி: கடந்த 13ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால் தாக்கப்பட்டதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவாலை தாக்கியதாக தகவல் பரவியது.
இது குறித்து சுவாதி மலிவால் புகார் தெரிவிக்காத நிலையில், போலீசார் தரப்பில் இருந்தும் மவுனம் காக்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் பூதாகரம் அடைந்த நிலையில், பாஜகவினர் உள்பட பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுவாதி மலிவால் டெல்லி போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட மேஜிஸ்திரேட் முன்னிலையில், சுவாதி மலிவாலின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் தனி உதவியாளர் பிபவ் ராவ் தன்னை அறைந்ததாகவும், வயிற்றில் அடித்ததாகவும், எட்டி உதைத்ததாகவும் சுவாதி மலிவால் புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி பிபவ் ராவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
முன்னதாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சுவாமி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்று (மே.17) பிபவ் ராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பிபவ் ராவ், மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இதனிடையே, இன்று (மே.17) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று சுவாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரம் அடைந்துள்ள நிலையில், அதை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துக் கொண்டு மேலும் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. எனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். எனது நடத்தையை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், மற்ற தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் தான் செய்கிறேன் என்று, கடவுள் அவர்களையும் சந்தோஷப்படுத்தட்டும்.
பாஜகவினர் தயவு செய்து இந்த சம்பவத்தை கொண்டு அரசியல் செய்கின்றனர். இந்த சம்பவம் மிக மோசமானது. தயவு செய்து அதில் அரசியல் செய்ய பாஜகவினர் முயற்சிக்க வேண்டாம்" என்று சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பை விளம்பர பேனர் விழுந்து 16 பேர் பலி: உரிமையாளர் கைது! - Mumbai Billboard Collapse