டெல்லி: மகேஷ் ஜெத்மலானி, ராகேஷ் சின்ஹா, ராம் ஷகால், சோனல் மண்சிங் ஆகியோரின் பதவிக் காலம் காலாவதியானதை அடுத்து மாநிலங்களைவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 86ஆக குறைந்தது. பதவிக் காலம் காலாவதியான நான்கு பேரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் நியமன எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இந்த நான்கு பேரின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 101ஆக குறைந்தது. மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் எண்ணிக்கை 113 ஆக இருந்த நிலையில் தற்போது 101ஆக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மகாராஷ்டிரா உள்பட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 நியமன எம்பிக்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் பாஜக தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும். மாநிலங்களவையில் தற்போது மொத்தமாக 225 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 87 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 26 பேர் உள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்பிக்களும், தமிழ்நாட்டின் திமுக மற்றும் டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு தலா 10 எம்பிக்களும் உள்ளனர். இவர்களை தவிர்த்து பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இணையாமல் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர்.
இது தவிர அதிமுக, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்கும் 11 உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது அதில் குறைந்தது 8 உறுப்பினர்களையாவது பாஜக பெற்றால் மட்டுமே மாநிலங்களவையில் அக்கட்சி எளிதில் மசோதாவை நிறைவேற்ற முடியும்.
இல்லையெனில் முன்னாள் கூட்டணிகளான அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையே எதிர்பார்த்து இருக்க வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பட்ஜெட் கூட்டத் தொடர்களில் பாஜக 12 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அதற்கு 15 உறுப்பினர்களின் ஆதரவு என்பது வேண்டும்.
இதில் ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 உறுப்பினர்களை கொண்டு உள்ளது. இதற்கு முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத் தான் மாநிலங்களவையில் பாஜக மசோதாக்களை நிறைவேற்றி வந்தது. ஆனால் தற்போது அது சாத்தியமற்றதாக காணப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்ததால், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வாக்குகளை பெறுவது கடினம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ஒடிசாவின் நவீன் பட்நாயக் கட்சியிடம் இருந்து பாஜகவுக்கு ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கிய நோயாளி.. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட அவலம்.. நடந்தது என்ன? - Man Stuck lift two days in kerala