புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிரான ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப் பதிந்து அமலாக்கத் துறையும், சிபிஐ-யையும் விசாரணை மேற்கொண்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மட்டுமின்றி பத்ம பாஸ்கர் ராமன், அட்வாண்டேஜஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் சேஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு எதிராகவும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.
அதே போல சிபிஐ தரப்பில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அசோக் குமார் ஜா, குமார் சஞ்சய் கிருஷ்ணா, தீபக் குமார் சிங், ராம் சரண், ஏ பழனியப்பன் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குகள் பதிவு செய்துள்ளது, ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்ஒர்க் நிறுவனம், மேக்சிஸ் மொபைல் நிறுவனம், பூமி அர்மடா பெர்ஹாட், பூமி அர்மடா நேவிகேஷன் , ஆனந்தா கிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல், அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட், எஸ் பாஸ்கரன் மற்றும் வி சீனிவாசன் ஆகியோர் மீதும் சிபிஐ தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 30-ஐ தொட நினைத்தேன்; சூழல் இடம்கொடுக்கவில்லை - விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரகுமானின் உருக்கமான பதிவு
இதற்கிடையே அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், அமலாக்கத்துறை பதிவு செய்த குற்றப்பத்திரிகையை ரோஸ் அவன்யூ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஹரிஹரன், "முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் வழக்கு தொடர்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197(1)ன் படி முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், முன் அனுமதி இன்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடக்கிறது,"என வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமலாக்கப்பிரிவின் வழக்கறிஞர், "ப.சிதம்பரத்தின் மனு ஏற்புடையதல்ல. விசாரணை மேற்கொள்வதற்கு முன் அனுமதி தேவையில்லை. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது அவரது அலுவலகப்பூர்வமான பணிக்கு எதிராக குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இதில் வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி தேவையில்லை,"என்று வாதிடப்பட்டது.
மேலும், விசாரணை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்