கொச்சி: கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இந்நிலையில், விமான பயணிகளிடம் நடத்தப்படும் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது, இந்த விமானத்தில் செல்லவிருந்த மனோஜ் குமார் (42) என்ற பயணியை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வழக்கமான சோதனை நடத்தியது. அப்போது உடைமைகள் ஆய்வு செய்யப்படும் தானியங்கி எக்ஸ்ரே கவுண்டரில் மனோஜ் குமாரின் பேக் அனுப்பப்பட்டது. அப்போது, மனோஜ் குமார் சிஐஎஸ்ஃஎப் அதிகாரியை பார்த்து ''எனது பையில் ஏதாவது வெடிகுண்டு இருக்கிறதா'' என்று கேட்டுள்ளார்.
இதை அவர் எதற்காக கேட்டார் என்று தெரியவில்லை இருப்பினும் குழப்பம் அடைந்த அதிகாரிகள் சீரியஸாகி மனோஜ் குமாரை தனி அறையில் வைத்து முழுவதுமாக சோதனை நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரிடம் வாய்மொழியாகவும் விசாரணை நடத்தினர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் தீவிர சோதனை நடத்தினர். கடைசியாக அதிகாரிகள் சந்தேகித்ததை போல எந்த பிரச்சினையும் இல்லை என தெரிய வந்தது.
இருப்பினும், விமான நிலைய அதிகாரிகள் மனோஜ் குமாரை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'வங்க தேசத்தில் இந்து சமுதாயம் பாதுகாப்பாக உள்ளது' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து மகா கூட்டணி..!