கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகினார். மாநில காங்கிரஸ் கமிட்டியுடனான ஆலோசனையை தொடர்ந்து மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் சோபிக்காததை அடுத்து தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மல்தஹா தக்சின் மக்களவை தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் இஷா கான் சவுத்ரி வெற்றி பெற்றார். மீதமுள்ள 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூட பெஹ்ரம்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுசுப் பதானிடம் 85 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். விரைவில் மாநில காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்படுவார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெஹ்ரம்பூர் மக்கலவை தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு மக்களவைவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரர் யுசுப் பதானிடம் மண்ணை கவ்வினார்.
இதையும் படிங்க: ஹஜ் புனித யாத்திரை: 98 இந்தியர்கள் பலி - மத்திய வெளியுறவு அமைச்சகம்! - Hajj Death Toll