கார்கில்: 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் 25வது கார்கில் விஜய் திவாஸ் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முப்படைகளின் துணைத் தளபதிகள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இந்திய ராணுவத்தை இளமையாகவும் தொடர்ந்து புத்துயீருடனுன், எந்த நேரத்திலும் போருக்கு ஆயத்தமாக வைத்திருக்கும் நோக்கத்தை கொண்டது தான் அக்னிபாத் திட்டம். இந்திய ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டியதன் தேவைகளை நாடு உணர்ந்துள்ளது என்று கூறினார். ராணுவம் பல ஆண்டுகளாக சீர்திருத்தங்களை கோரி வரும் நிலையில், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதற்கு முன்னர் வரை போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களில் அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்டது சிறந்த உதாரணம். நாடாளுமன்றத்திலும் பல ஆணையங்களிலும் ராணுவத்தில் இளைஞர்களை புகுத்த வேண்டும் என்கிற பேச்சுகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்திச் சென்றவர்களை பற்றி கூற வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகளில் அவர்கள் ராணுவ வீரர்கள் மீது அக்கறை கொண்டிராததே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
500 கோடி ரூபாய் என்ற சொற்பத் தொகையைக் காட்டி ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என பொய் சொன்னவர்கள் மத்தியில் தற்போதைய அரசு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அமல்படுத்தி உள்ளதாகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 1 கோடியே 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களின் சராசரி வயது உலக சராசரியை விட அதிகமாக இருப்பது பல ஆண்டுகளாக எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்த நிலையில் தற்போது அதற்கு அக்னிபாத் திட்டம் மூலம் விடை கண்டு இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். ராணுவம் என்பது அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடிப்பது, அணிவகுப்புகளில் ஈடுபடுவது என ஒரு சில நினைத்துக் கொண்டு இருப்பதாகவும், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை தான் ராணுவ வீரர்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தை எப்போது துடிப்புடனும், இளமையாகவும், போருக்கு தயார் நிலையில் வைத்திருப்பது தான் அக்னிபாத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மோடி கூறினார். அக்னிபாத் திட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினையை அரசியல் மயமாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக லே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 4.1 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப் பாதையான ஷின்குன் லா சுரங்கப் பாதை நிமு பதும் தர்ச்சா சாலையில் சுமார் 15 ஆயிரத்து 800 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. எந்த கால சூழலிலும் லே பகுதியை இணைக்கக் கூடிய வகையில் இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 25வது கார்கில் போர் நினைவு தினம்! விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை! - 25th Kargil Vijay Diwas