சோலன்: இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் அடுத்த பர்வனூ தொழிற்பேட்டை பகுதியில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த 80 ஊழியர்கள் நிறுவன கொள்கை விதிகளை மீறி மீசை மற்றும் தாடி வைத்திருந்ததாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஊழியர்கள் கேட்ட போதும் நிறுவனத்தின் சார்பில் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உழியர்கள் இது தொடர்பாக தொழிலாளர் ஆணையர் மற்றும் மாவட்ட ஆணையர், இமாசசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகியோரிடம் கடிதம் மூலம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே தாடி மற்றும் மீசையை கம்பெனி கொள்கைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்து கொண்டால் பணிநீக்கம் செய்யப்பட்ட 80 ஊழியுர்களை மீண்டும் வேலை எடுத்துக் கொள்வதாக நிறுவனம் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும் பின்னர் அதையும் நிறுவனம் சார்பில் மறுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து தனியார் மருந்து ஆலையில் ஆய்வு நடத்திய பர்வனூ தொழிலாளர் துறை ஆய்வாளர், இரு தரப்பு கோரிக்கை மற்றும் விளக்கங்களை கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக சோலன் துணை ஆணையர் மன்மோகன் சர்மா கூறினார்.
கம்பெனி கொள்கைகளை மீறி முகச்சவரம் செய்து கொண்டதாக தனியார் மருந்து நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமேதியில் ராகுல்? ரேபரலியில் பிரியங்கா? காங்கிரஸ் அறிவிப்பு? பாஜகவில் யார்? - Lok Sabha Election 2024