டெல்லி: நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்க, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவை தொகுதிகளில் இன்று (மே.13) 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
96 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 62.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 68.36 சதவீத வாக்குகளும், ஜம்மு காஷ்மீரில் மிகக் குறைவாக 36.01 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்று உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பீகாரில் - 54.14 சதவீதம், ஜார்கண்டில் - 63.14 சதவீதம், மகாராஷ்டிராவில் - 52.49 சதவீதம், ஒடிசாவில் - 62.96 சதவீதம், தெலுங்கானாவில் - 61.16 சதவீதம் மற்றும் உத்தர பிரதேசத்தில் - 56.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் 175 இடங்களுக்கும், ஒடிசா சட்டப் பேரவையில் உள்ள 147 தொகுதிகளில் 28 இடங்களுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 67.99 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 62.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 717 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜேடியுவின் ராஜீவ் ரஞ்சன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மஹுவா மொய்த்ரா, சத்ருகன் சின்ஹா, யூசுப் பதான், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பாஜக தலைவர்கள் கிரிராஜ் சிங், மாதவி லதா, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "ஏழை பெண்கள் வங்கிக் கணக்கில் ஜூலை 1 முதல் ரூ.8,500 வரவு" - ராகுல் காந்தி! - Lok Sabha Election 2024