டெல்லி: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல் ஆறு கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி இதுவரை 49 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 60.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
குறைந்தபட்சமாக பஞ்சாபில் 46 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. மூன்று மணி நிலவரப்படி பீகாரில் 42.95 சதவீதமும், சண்டிகரில் 52.61 சதவீத வாக்குகளும், இமாச்சலப் பிரதேசத்தில் 58.41 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 60.14 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து ஒடிசாவில் 49.77 சதவீத வாக்குகளும், பஞ்சாப் மாநிலத்தில் 46.38 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 46.83 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலத்தில் 58.46 சதவீத வாகுகளும் மதியம் 3 மணி நிலவரப்படி பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார், சண்டிகர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இதில் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு முறை வாரணாசி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி 3வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு 24 பர்கானஸ் பகுதியில் இவிம் இயந்திரங்கள் திருடப்பட்ட நிலையில், இரண்டு விவிபாட் இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவிஎம் இயந்திரங்களை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு! மேற்கு வங்கத்தில் குளத்தில் வீசப்பட்ட இவிம் இயந்திரங்கள்! - Lok Sabha Election 2024