டெல்லி: சென்னை, வாரணாசி, பாட்னா, ஜெய்ப்பூ உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் துபாய் நோக்கி புறப்பட இருந்த எமிரேட்ஸ் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் நீண்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விமான தனிப்பட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 13 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் மீண்டும் விமானம் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை தவிர்த்து கோயம்புத்தூர், பாட்னா, வாரணாசி, நாக்பூர், ஜெய்ப்பூ, வதோதரா, ஜபலூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலில் "ஹலோ, விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதற உள்ளது. நீங்கள் அனைவரும் உயிரிழக்கப் போகிறீர்கள்" என அந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் ஒரே பாணியில் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். exhumedyou888@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாகவும், இது KNR எனப்படும் ஆன்லைன் குரூப்பால் அனுப்பப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே கும்பல் தான் கடந்த மே 1ஆம் தேதி டெல்லி, என்சிஆர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்று பல்வேறு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அது குறித்து சைபர் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசாம் உள்துறை செயலாளர் தற்கொலை! புற்றுநோய் பாதித்த மனைவி உயிரிழந்த சோகத்தில் துயர முடிவு! - Assam Home Secretary suicide