பலோடா பஜார்: சத்தீஸ்கர் மாநிலம், பலோடா பஜார் மாவட்டத்தில் சத்னாமி சமூகத்தினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் 'ஜெய்ட்காம்ப்' என்ற வழிபாட்டுத் தலத்தை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மே 15ஆம் தேதி இரவு பலோடா பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத தூணை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆவேசமான சத்னாமி சமூகத்தினர் சுமார் 5 ஆயிரம் பேர், நேற்று மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தனி விசாரணை குழுவை அமைக்கக்கோரியும் பலோடா பஜார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறி போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், தடுப்புகளை உடைத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, கட்டிடத்தின் மீது கற்களை வீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்துக்கும், எஸ்பி அலுவலகத்துக்கும் தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், வன்முறையைத் தடுக்க முயன்ற காவலர்கள் பலர் காயம் அடைந்தனர். இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். ஆனால், தீயணைப்பு வாகனத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு தகவல் சென்ற நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உடன் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் உடனடியாக சம்பவ இடத்துக்கு ராய்ப்பூர் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கூடுதல் போலீசாருடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போராட்டத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பலோடா பஜார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கலவரபூமியாக மாறி கட்டிடங்கள், வாகனங்கள் முற்றிலுமாக சேதமாகின. இந்நிலையில், பலோடா பஜார் நகராட்சிப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் ஜூன் 16 நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலோடா பஜார் நகராட்சியில் மறு உத்தரவு வரும் வரை பேரணிக்கும், எந்த விதமான ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்தும் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. அதேபோல, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டாக சேரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ்பி கூறுகையில், ''வன்முறை பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்துள்ளோம், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். வன்முறையால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பீடு நடந்து வருகிறது'' என தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், ''சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் கூறினார். மேலும், சத்னாமி சமூகத்தினரிடம் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்த முதல்வர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.
இதையும் படிங்க: கடின உழைப்பு வீணாகாது; உறுதியான சிப்பாயாக செயல்படுங்கள்" - ஊழியர்களுக்கு ராமோஜி ராவ் எழுதிய 'பொறுப்பு உயில்'