தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல் எம்பி - நாமக்கல் எம்எல்ஏ இடையே முற்றும் மோதல் - இருவர் மீதும் வழக்குப் பதிவு

By

Published : Jun 17, 2020, 3:24 AM IST

நாமக்கல்: நாமக்கல் மக்களவை உறுப்பினருக்கும் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக எம்.பி. அதிமுக எம்.எல்.ஏ இடையே மோதல்
திமுக எம்.பி. அதிமுக எம்.எல்.ஏ இடையே மோதல்

கடந்த மே 28ஆம் தேதி நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசுப் பணிகளை நாமக்கல் மக்களவை உறுப்பினரான ஏ.கே.பி. சின்ராஜ் (கொங்குநாடு தேசிய கட்சி) ஆய்வுசெய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், நகராட்சி குடிநீர் இணைப்பை வீட்டிற்கு முறைகேடாகப் பயன்படுத்திவருவதாக புகார் வந்துள்ளதாகவும், அதுகுறித்து அலுவலர்களை ஆய்வுசெய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் சின்ராஜ் தங்கியிருந்த நாமக்கல் பயணியர் மாளிகைக்குச் சென்ற பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தனது பெயரைக் கெடுப்பதாகக் கூறி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சின்ராஜ் நாமக்கல் ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாஸ்கர், அவரது ஆதரவாளர்கள் மயில்சுந்தரம், சேகர், செல்வகுமார் (எ) ராஜா, வகுரம்பட்டி ராஜா உள்ளிட்ட 25 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

அதன்படி இவர்கள் அனைவர் மீதும் நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் கடந்த 6ஆம் தேதி கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். இதனிடையே மயில்சுந்தரம் நாமக்கல் காவல் நிலையத்தில் சின்ராஜ் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சின்ராஜ், இளங்கோ உள்ளிட்ட பத்து பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் போக்கின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கமிஷனே கதியாக இருக்கும் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ஸ்டாலினை விமர்சிக்க தகுதியில்லை' - டி.ஆர்.பாலு

ABOUT THE AUTHOR

...view details