சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கீழ்ப்பாக்கம், ஆவடி, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
அதேபோல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.தென்சென்னை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
South Chennai, ECR, OMR, Siruseri, Shollinganallur, Guduvancherry all in the path of Red Thakkali now. Very intense rain rate will be seen there.
— Tamil Nadu Weatherman (@praddy06) July 3, 2024
Chennai July monthly rainfall average is 100 mm. In just 1 hour we got 60 mm rainfall.
Chennai got wettest June month since 1996. pic.twitter.com/nXYLgcPnRd
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், "தென்சென்னை, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் சராசரியாக ஜூலை மாதத்தில் 100 மி.மீ பெய்யும், ஆனால் நேற்று 1 மணி நேரத்தில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது சென்னையில் அதிகளவு மழை பெய்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தான்.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!