சென்னை: டெல்லியில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. நாளை மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக 20 எதிர்க் கட்சிகள் தெரிவித்து உள்ளன.
காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்கட்சிகள் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
அதே நேரம் ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட் நாயாக் உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளன.
மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் "புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது?" என நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "நாளை புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா என்பது முழு நாடும் கொண்டாடும் தருணம். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் கலந்து கொள்ளாததும் மற்றும் எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாததும், இந்த தருணத்தில் தேசப் பெருமிதம் என்பது அரசியல் ரீதியாக பிளவுபட்டு உள்ளது.