திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக, திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பின்னர், ஜெயக்குமார் இறப்பதற்கு முன்னால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். மேலும், அவரது மகன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று (ஜூலை 6) அவரது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் கைகளில் நீண்ட கம்புகளைக் கொண்டு குப்பைக் கூளங்களை கிளரி ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு செய்தனர். ஜெயக்குமார் மரணமடைந்து 65 நாட்களாகியும் இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளின் இன்றைய சோதனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிபிஜி சங்கர் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை.. இரண்டாண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய அரசியல் கொலைகள்! - tamil nadu politicians murders