தமிழ்நாடு

tamil nadu

#Ashes: ஆஸி.யை சொல்லாமல் அடித்த இங்கிலாந்து!

By

Published : Sep 15, 2019, 11:50 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்டின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது.

The Ashes 2019

கிரிக்கெட் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆவலுடன் பார்க்கவைக்கும், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களை எடுக்க, அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 329 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

ஸ்டெம்பிங்கில் அவுட் ஆன மார்னஸ் லாபுக்ஸாக்னே

இதைத்தொடர்ந்து, 399 ரன்கள் இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணியில், வார்னர், மார்கஸ் ஹாரிஸ் வழக்கம் போல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், 7 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். அதுவரை இந்தத் தொடரில் தனது பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணியைக் காப்பாற்றி வந்த இவர், இம்முறை 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித்

சொல்லி வைத்ததைப் போல், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், லெக் ஸ்லிப்பில் ஃபீல்ட் செட் செய்து ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்தார். இதையடுத்து, மிட்சல் மார்ஷ், கேப்டன் டிம் பெய்ன், பெட் கம்மின்ஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும், அவர்களுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த மேத்யூவ் வேட் இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார்.

ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஸ்டூவர்ட் பிராட்

இதனால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் செய்த மேஜிக் போல இவரும் இன்றைய போட்டியில் இந்த மேஜிக்கை செய்வார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மேத்யூ வேட் 117 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோ ரூட் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார்.

மேத்யூவ் வேட்

அதன்பின், வந்த நாதன் லயான், ஹசல்வுட் ஆகியோர் ஜாக் லீச் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் தந்து ஆக்ஷன் ரிப்ளே போல ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 77 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இங்கிலாந்து அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் நான்கு, ஜாக் லீச் நான்கு, ஜோ ரூட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐந்தாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து

இதன்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 47 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் ஆஷஸ் தொடர் சமனில் முடிந்துள்ளது. இருப்பினும், கடந்த 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வென்றதால், ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details