சென்னை: இந்தியா - தென் ஆப்பரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை இந்திய அணி 3 - 0 எனவும், இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இருநிலை போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணியினர் உற்சாகமாக உள்ளனர். இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டாஸ்மின் பிரிட்ஸ் - லாரா ஜோடி களமிறங்கியது. லாரா முதல் ஓவரிலேயே தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 3வது ஓவரில் லாரா அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் என விளாசி அணிக்கு ரன்களைக் குவித்தார். 5 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்கா அணி 32 - 0 என்ற கணக்கில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய லாரா தனது விக்கெட்டை இழக்க, மரிசான் கேப் களமிறங்கினார்.
களத்தில் டாஸ்மின் பிரிட்ஸ் - மரிசான் கேப் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடினர். 10 ஓவர் முடிவிற்கு 78 - 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி விளையாடியது. இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தனர். 16வது ஓவரில் டாஸ்மின், மரிசான் ஆகிய இருவரும் தனது அரைசதத்தை பதிவு செய்தனர்.
சிறப்பாக விளையாடிய மரிசான் கேப் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சோலி ட்ரையான் களமிறங்கினார். களத்தில் டாஸ்மின் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என விளாசி அணிக்கு ரன்களைக் குவித்தார். வந்த வேகத்தில் சோலி ட்ரையான் பெவிலியன் திரும்ப நாடின் டி கிளர்க் களம் கண்டார். 20 ஓவர் முடிவிற்கு தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களைக் குவித்தது.
முன்னதாக, டி20 உலகக்கோப்பை போட்டியைக் காண வந்த ரசிகர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது ரசிகை தர்ஷினி கூறுகையில், "இந்த உலகக்கோப்பை மேட்சினை நேரில் காண்பது இதுதான் முதல் முறை. மேட்ச் பார்ப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறது. மேலும், நான் ஸ்மிருதி மந்தனாவின் மிகப்பெரிய ரசிகை. மேட்ச் பார்ப்பதே ஸ்மிரிதி மந்தனாவிற்காக தான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துமா இந்திய மகளிர் படை? டி20 தொடர் சென்னையில் இன்று தொடக்கம்! - IND VS SA WOMENS T20I