கோவையில் காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி - ஆர்வத்துடன் ஆடிய காவலர்கள்! - கோவை காவலர்களுக்கு ஜூம்பா
Published : Feb 17, 2024, 12:16 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாநகர காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோருக்கு வாரந்தோறும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் காவலர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வரிசையில், புது முயற்சியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு ஜூம்பா நடன பயிற்சி வகுப்புகள் இன்று (பிப்.17) துவங்கப்பட்டு உள்ளது. ஜூம்பா நடனம், சுவாசம் தொடர்பான பிரச்சினை, மன அழுத்தம், செரிமான பிரச்சினைகள், உடல் எடையை சீராக வைத்தல், நல்ல உறக்கம் ஆகியவற்றிற்கு நன்மை அளிக்கும் என்பதால், காவலர்களுக்கு இந்த நடனப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற முதல் நாள் வகுப்பில், சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்ட நிலையில், வரும் நாட்களில் இது விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து காவலர்களுக்கும் இந்த நடனப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.