வெள்ளியங்கிரி கோயில் உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை.. வீடியோ வைரல்! - ELEPHANT ENTERED VELLIANGIRI TEMPLE
Published : Feb 9, 2025, 8:54 PM IST
கோயம்புத்தூர்: வெள்ளியங்கிரி கோயில் அடிவாரத்தில் உள்ள உணவு கூடத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்குள்ள உணவு பொருள்களை கபளீகரம் செய்துள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பக்தர்களால் தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோயில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் சிவனை தரிசிக்க மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் உள்ள அன்னதான கூடத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை புகுந்துள்ளது. தொடர்ந்து, அங்கு உணவு தயாரிக்க வைத்திருந்த பொருட்களை உண்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், காட்டுயானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்துள்ளது. இதில், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகை வைரலாகி வருகிறது.