பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - viral video of Car accident - VIRAL VIDEO OF CAR ACCIDENT
Published : May 7, 2024, 9:38 PM IST
கடலூர்: அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் தனது புதிய காரை பூஜைக்காக கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலுக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஓட்டி வந்துள்ளார். அதன் பின்னர், சுதாகரின் புதிய காருக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுதாகர் காரை எடுக்க முயன்றபோது, அவர் காரின் பிரேக்கிற்கப் பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், கோயிலின் பிரதான நுழைவாயில் படிக்கட்டுகளில் ஏறி, கோயிலுக்குள் புகுந்து கோயிலின் நூறுகால் மண்டபத்தின் தூணில் மோதி நின்றுள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் காரை ஓட்டிய சுதாகர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். இருப்பினும், காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், , விபத்துக்குள்ளான காரை மீட்டு, சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.