மயில் தோகை போல 51 வேல்களை முதுகில் குத்தி பறவை காவடி எடுத்த பக்தர்.. நெல்லையில் பரவசம்..!
Published : Jan 24, 2024, 3:14 PM IST
திருநெல்வேலி: நெல்லை டவுன் அடுத்துள்ள குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜி(36). இவர் கடந்த 11 ஆண்டுகளாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நாளை (ஜன.25) தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
இதனை அடுத்து, வழக்கம்போல் பறவை காவடிக்காக தயாராகிய ராஜி, தனது முதுகுப் பகுதியில் 51 வேல்களை மயில் தோகை போல குத்திக்கொண்டார். இந்த வேண்டுதலுக்காக கடந்த 48 நாட்களாக ராஜி விரதம் கடைப்பிடித்து வந்துள்ளார். மேலும், பறவை காவடிக்காக வேல் குத்தும் பணிக்கு, நாகர்கோவிலில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் வந்திருந்தனர்.
வேலும் 3 அடி நீளம் கொண்ட 51 வேலையும் முதுகில் மயில் தோகை போல குத்தியபடியும், வாகனத்தில் முன்பக்கம் அந்தரத்தில் தொங்கியபடியும், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். அப்போது, அவருடன் விரதம் இருந்த 35 பக்தர்களும் வண்டியுடன் பாதயாத்திரையாகச் சென்றனர். அதன் பின்னர் நெல்லை ரத வீதி வழியாகச் சென்ற ராஜுவைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்த முருகனை நினைத்து அரோகரா முழக்கங்கள் எழுப்பினர்.