என்ன இவ்ளோ டிராபிக்? களத்தில் இறங்கிய பெண்.. வைரலாகும் வீடியோ! - Women clear traffic in Coimbatore
Published : Mar 11, 2024, 7:04 PM IST
கோயம்புத்தூர்: கோவை அவிநாசி மரக்கடை, புரூக் பாண்ட் ரோடு, அவிநாசி சாலை, கூட் செட் சாலை ஆகிய முக்கிய சாலைகளை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது, கோவை அவினாசி மேம்பாலம். போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளை இணைப்பதால், இந்த மேம்பாலத்தின் மேலும், கீழும் வாகன நெரிசல் எப்போதும் காணப்படுவது வழக்கம்.
இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலத்தின் மேலே போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்வர். ஆனால், மேம்பாலத்திற்கு கீழ், புரூக் பாண்ட் சாலையை இணைக்கும் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால், அப்பகுதியில் பல்வேறு சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இன்றும் மேம்பாலத்திற்கு அடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் கவனித்து, தன் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்துள்ளார்.
இதனை வாகன ஓட்டி ஒருவர் தன் ஸ்மார்ட் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலானதையடுத்து, அப்பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாலத்தின் மேலே போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டிருப்பது போல், மேம்பாலத்திற்கு கீழும் காவலர்களை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.