நெல்லை புது பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம்.. ஊழியருடன் கடும் வாக்குவாதம்! - Tirunelveli New bus stand - TIRUNELVELI NEW BUS STAND
Published : Aug 13, 2024, 7:50 PM IST
திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டணக் கழிப்பிடங்களை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. மேலும், இந்த கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ஒரு ரூபாயும், மலம் கழிக்க இரண்டு ரூபாய் என கட்டணம் மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பொதுமக்களிடம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்தச் சென்ற நபரிடம் அங்கிருந்த ஊழியர் பத்து ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர், அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பின்னர், அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அப்பகுதியில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.