மணல் ஏற்றிக்கொண்டு வரிசையாக வந்த லாரிகள் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து! - ஓட்டுநர்கள் படுகாயம்
Published : Feb 4, 2024, 7:45 PM IST
சென்னை: மீஞ்சூர் - வண்டலூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது, எம் சாண்ட் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர்கள், உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரை அருகே, மீஞ்சூர் - வண்டலூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், டீசல் இல்லாமல் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு வந்த இரண்டு லாரிகள், நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி மற்றும் அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள், விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.