கொடிவேரி நீர்வீழ்ச்சியில் குறைந்த நீர்வரத்து..! எஞ்சிய நீரில் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்..!
Published : Jan 28, 2024, 7:51 PM IST
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களிலும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் கடந்தாண்டை விட பாதியாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் சுமார் 30 டி.எம்.சி தண்ணீர் இருந்த நிலையில் தற்போது 15 புள்ளி 40 டி.எம்.சி அளவிற்கே தண்ணீர் உள்ளது. அணைக்கு தற்போது சுமார் 700 கன அடி மட்டுமே தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில் தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 800 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டு உள்ளது. கொடிவேரி அணை நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அணையில் வடியும் சிறிதளவு தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர்.