வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - THENI VEERAPANDI TEMPLE - THENI VEERAPANDI TEMPLE
Published : Apr 17, 2024, 7:23 PM IST
தேனி: தேனி அருகே உள்ள வீரபாண்டியில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழா, இன்று கொடிக் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக, கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலின் அருகே செல்லும் முல்லைப் பெரியாற்றில் இருந்து முக்கோண வடிவிலான கொடி மரக் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க கொடிக்கம்பத்தை ஊர்வலமாக சுமந்து வந்து, கௌமாரியம்மன் திருக்கோயிலை அடைந்தனர்.
அங்கு கோயில் வளாகத்தில் கௌமாரியம்மன் எதிரே கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கொடிக்கம்பத்திற்கு வண்ண மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோயிலில், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.