முழு கொள்ளளவை எட்டிய தேனி சோத்துப்பாறை அணை.. மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! - Theni Sothuparai Dam - THENI SOTHUPARAI DAM
Published : May 21, 2024, 11:55 AM IST
தேனி: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேலங்களம், ஜெயமங்களம் மற்றும் குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்பொழுது அணைக்கு நீர்வரத்து 49.63 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளதால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.