நாடாளுமன்றத் தேர்தல் விழிப்புணர்வு: கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் சென்று வாக்களித்த நீச்சல் வீரர்கள்! - lok sabha elections awareness
Published : Apr 10, 2024, 7:51 PM IST
சென்னை: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 60 அடி ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி வீரர்கள் வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வருபவர் அரவிந்த். இவர் டெம்பிள் அட்வென்ச்சர் (Temple adventures) என்ற பெயரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் உட்பட 6 வீரர்கள் சென்னை, நீலாங்கரை கடற்கரை பகுதியில் கடலுக்குள் 60 அடி ஆழத்தில் வாக்கு பெட்டி இயந்திர மாதிரி வடிவமைப்பு எடுத்துச் சென்று வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தாங்கள் கடலுக்குள் வாக்களித்தது போல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், ஒருவிரல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.