வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு! - VELLORE
Published : Nov 23, 2024, 7:36 PM IST
வேலூர்: வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் தமிழ்நாடு மாநில குத்து சண்டை சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் குத்து சண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்து சண்டை போட்டிகள் இன்று துவங்கியது. இதனை தடகள சங்க செயலாளர் இளங்கோ துவங்கி வைத்தார்.
மாநில குத்துச் சண்டை சங்க பொதுச்செயலாளர் பிரித்திவிராஜ் தலைமையில் தொடங்கிய இந்த போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 2 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
இது குறித்துக் குத்துச் சண்டை சங்க மாநில பொதுச்செயலாளர் பிரித்திவிராஜ்,"7 லட்சம் வரை செலவு செய்து, இந்த போட்டியை நடத்தி வருகின்றோம். ஆனால் இதே நேரத்தில் வேறு சிலரும் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் நடத்தி வருகின்றனர். இதனால் இங்கு வரக்கூடிய வீரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனை நினைத்தால் கவலையாக உள்ளது.
ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் போட்டி நடத்துவது என்பது சரியாக இருக்காது, எனவே இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வேலூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்தார்.