மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு இடம் பெயர்ந்தார் குரு.. வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்! - Guru peyarchi - GURU PEYARCHI
Published : May 1, 2024, 8:00 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வசிஷ்டேஸ்வரருக்கும் - அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில், தனி விமானத்துடன், குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, இக்கோயிலில் பட்டு வஸ்திரம், நவதானியங்கள், பழங்கள் கொண்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னதாக, குரு பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், புனித நீர் கடம் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட குரு பகவானுக்கு சரியாக 5.19 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகாரம் செய்துகொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 6ஆம் தேதியன்று ஏகதின லட்சார்ச்சனையும், 7, 8 ஆகிய தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.