கும்பகோணம் அருகே கற்சிவலிங்கம் திருட்டு.. போலீசார் தீவிர விசாரணை! - Sivalingam idol theft - SIVALINGAM IDOL THEFT
Published : Aug 13, 2024, 9:30 PM IST
கும்பகோணம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமைந்துள்ளது கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயில். இதன் இணைக் கோயிலாக அமையப்பெற்றது, இன்னம்பூர் நித்திய கல்யாணி மற்றும் சுகுந்த குந்தலாம்பாள் சமேத எழுத்தறிநாதர் சுவாமி திருக்கோயில்.
பழமையான இக்கோயில் பிரகார வடமேற்கு மூலையில் சுமார் ஓரடி உயரம் கொண்ட கற்சிவலிங்கம் மற்றும் அதன் அருகேயே அதே அளவிலான சிறிய கல் விநாயகர் சிலையும் இருந்தது. இந்நிலையில், இந்த இரு சிலைகளில் சிவலிங்கம் மட்டும் மாயமாகியுள்ளது. அருகே இருந்த விநாயகர் சிலை பீடத்தில் இருந்து அர்ச்சகர் அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல கோயிலில் பூஜை செய்வதற்காக வந்த அர்ச்சகர், கற்சிவலிங்கம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக கிராம நாட்டமைகளிடமும், சுவாமிமலை திருக்கோயில் நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.
அதன்பேரில், திருட்டுச் சம்பவம் தொடர்பாக, சுவாமிமலை திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, சுவாமிலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையுடன் தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.