மழை வெள்ளத்தில் காரோடு அடித்து செல்லப்பட்ட நபர் - ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்ட இளைஞர்கள்! - THOOTHUKUDI RAIN
Published : Dec 14, 2024, 6:20 PM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி நேற்று (டிசம்பர் 14) மழை நீர் வெளியேறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கயத்தாறு உப்பாற்று ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள சாலைகள் முற்றிலும் மூழ்கி காணப்பட்டது. இதனால் போக்குவரத்தும் தடைப்பட்டது. இந்நிலையில் வெள்ளாலங்கோட்டை ஊருக்கு கிழக்கே உள்ள உப்பாற்றில் தாம்போதிபாலத்தில் மழை நீரில் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் மனோஜ் குமார் என்பவர் காரோடு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
மழைநீர் காரை அடித்துச் சென்றதில், அங்குள்ள சீமை கருவேலமரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல் மனோஜ் குமார் போராடிக் கொண்டிருந்தார். தன்னைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஜேசிபி இயந்திரம் மூலமாக சீமை கருவேலமரங்களை அகற்றி மழை வெள்ளத்தில் காருடன் சிக்கிக் கொண்டிருந்த மனோஜ் குமாரை மீட்டுள்ளனர். மேலும், இளைஞர்களின் இந்த செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.