“மழை நிக்கட்டும்..” ஆண்டிப்பட்டி அருகே பேருந்து இருந்தும் காத்திருந்த பயணிகள்! - rainwater flowed inside the bus - RAINWATER FLOWED INSIDE THE BUS
Published : May 25, 2024, 3:30 PM IST
தேனி: உசிலம்பட்டியில் இருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பேருந்து பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து ஆண்டிப்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி செல்வதற்காக நின்றிருந்த டவுன் பேருந்தில் மேற்கூரையில் மழை நீர் பேருந்துக்குள்ளே ஒழுகியது.
பேருந்துகளில் பயணிகள் அமரும் இருக்கையின் மேல் மழை நீர் கொட்டியதால் பேருந்தில் பயணிக்க முடியாமல் மழை நிற்கும் வரை பேருந்துக்குள் ஏறாமல் பயணிகள் காத்திருந்தனர். மேலும், மழைக்காலங்களில் பேருந்துகள் பழுது ஏற்பட்டு தள்ளிவிடும் நிலை ஏற்படும் என்பதால் ஓட்டுநரும், நடத்துநரும் மழை நிற்கும் வரை பேருந்து இயக்காமல் காத்திருந்தனர்.
பின்னர், அந்த பகுதியில் மழை நின்ற பிறகு பயணிகள் ஏற்றப்பட்டு, பேருந்து உசிலம்பட்டி புறப்பட்டுச் சென்றது. இரண்டு ஊர்களுக்கும் இடையே அதிகமாக இருக்கும் கிராமப்புறங்களின் வழியாகச் செல்லும் இந்த வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.