கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை.. பேருந்து மீறி ஏறி குத்தாட்டம் போட்ட நபர்! - heavy rain in karur video has viral - HEAVY RAIN IN KARUR VIDEO HAS VIRAL
Published : May 22, 2024, 11:46 AM IST
கரூர்: கரூரில் கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே 113 டிகிரி வெப்பநிலை வரலாறு காணாத வகையில் பதிவானது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
மே 20-ஆம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கிய மழை சுமார் 6 மணி வரை 2 மணி நேரம் கரூர் நகர் பகுதியில் மட்டும் 132.5 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் கரூர் நகர் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
கரூர் வெங்கமேடு பகுதியில், உள்ள தனியார் சிலிண்டர் இணைப்பு மையம் அருகே வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள், மழை நீரில் அடித்து சென்றன. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக சிலிண்டர்களை எடுத்து மேடான பகுதியில் வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போல, கரூர் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள மினி பேருந்து நிலையத்தில் மழை பெய்த போது இளைஞர் ஒருவர் பேருந்தின் மீது ஏறி உற்சாகமாக நடனமாடிய காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த, இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையை, சமூக வலைதளங்களில் வீடியோக்களாக கரூர் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.